தமிழக அரசியல் களத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய,மக்களின் மனதில் இன்று வரை நிலைக் கொண்டுள்ள,சக தலைவர்களால் பிரமிப்புடன் பார்க்கப்பட்ட ,முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும்,பிரபல தென்னிந்திய நடிகையுமாக,தமிழக முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்துள்ள மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளராகவும் இருந்து மக்களால் புரட்சி தலைவி அம்மா என அன்போடு அழைக்கப்பட்ட இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா அவர்களை பற்றி காண்போம்.
தமிழகத்தின் மையப் புள்ளியான திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் என்பது தலைவியின் பூர்விகம் ஆகும்.ஆனால் அவர் கர்நாடக மாநிலம் மைசூரில் 1948இல் பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.அம்மு என்ற செல்லப் பெயரில் அழைக்கப்பட்டார்.ஆரம்பத்திலேயே இவர் இசையிலும் நாட்டியத்திலும் ஆர்வம் கொண்டவர்.பிறகு பிரபல இசை வித்துவான்களிடம் கர்நாடக சங்கீத பயிற்சியும் பெற்று கொண்டார்.அதுவே ஆங்கில நாடகத்தில் அவர் நடிக்க வாய்ப்பை பெற்று கொடுத்தது.
பள்ளிப்படிப்பை முடித்த நிலையில் தலைவிக்கு சினிமா துறையில் வாய்ப்புகள் வரவே, முதலில் ஒரு கன்னட மொழி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார்.பிறகு வெண்ணிற ஆடை படத்தில் தமிழ் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நல்ல வெற்றியைச் சூட்டியது.அப்படத்திற்கு பிறகு ஜெயலலிதா அவர்களுக்கு வந்த வாய்ப்புகள் அதிகம்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராகிய எம்.ஜி.ஆர்க்கு ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார்.இவர்கள் இருவரும் இணைந்து மொத்தமாக 28 படங்கள் ஒன்றாக நடிக்கும் அளவிற்கு இருவரையும் மக்கள் அதிகமாக விரும்பினர்.புரட்சி தலைவிக்கு இருந்த வசீகர தோற்றம் , சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை இவற்றோடு சேர்ந்து எம்ஜிஆரின் கதை நாயகி என பெருமையோடு அழைக்கப்பட்டார்.
முண்ணனி நடிகர்களான எம்ஜிஆர், என்டிஆர், சிவாஜி, ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், சோபன் பாபு பல்வேறு நடிகர்களோடு பல்வேறு மொழிகளில் இணைந்து மொத்தம் 125 படங்களில் நடித்து வெற்றி கண்டார்.அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜெயலலிதா எழுத்து,நாடகம், பத்திரிக்கை என இயங்கத் தொடங்கினார்.பிரபல பத்திரிகைகளான தாய்,கல்கி போன்ற இதழ்களில் கதை மற்றும் கட்டுரை எழுதத் தொடங்கினார்.
அந்த சமயத்தில் தனது தாயார் சந்தியாவையும் இழந்தார்.எழுத்தும் பத்திரிகையுமாக இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்த எம்ஜிஆர்.அதை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.தனது கனவு திட்டங்களில் ஒன்றான சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு வர நினைத்த எம்ஜிஆர் அந்த பொறுப்பை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.
பிறகு ஜெயலலிதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.அதில் ஜெயலலிதா கொள்கைகளை உருவாக்குபவர் அல்ல.கொள்கைகளை பரப்புபவர்.அப்போது ஜெயலலிதாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் சசிகலா.ஆரம்ப கட்டத்தில் இயல்பாக பழகத் தொடங்கி பிறகு ஜெயலலிதாவுக்கு தோழியாக உடன் பிறவா சகோதரியாக சசிகலா இருந்தார்.பொது கூட்டம் முதல் தேர்தல் பிரச்சாரம் வரை ஜெயலலிதா உடனே இருந்தார் சசிகலா.
திருச்செந்தூர் இடைத்தேர்தலில் புரட்சி தலைவி செய்த பிரச்சாரம் மற்றும் செயல்பாடு எம்ஜிஆர் அவர்களை நெகிழ வைத்தது.பிறகு ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பியதோடு, நாடாளுமன்ற குழுவின் துணை தலைவராகவும் நியமித்தார்.
கட்சியில் ஜெயலலிதாவுக்கு அளித்த முக்கியத்துவம் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.எம்ஜிஆர் தமிழகத்தில் இல்லாத நேரத்தில் ஜெயலலிதா கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கப்பட்டார்.அதே நேரம் கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தேர்தலின்போது ஜெயலலிதாவின் பிரச்சாரம் அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.எம்ஜிஆர் நலம் பெற்று திரும்பிய பிறகு பறிக்கப்பட்ட பொறுப்புகள் மீண்டும் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எம்ஜிஆரின் மரணத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்த தலைவியின் எதிர்ப்பு அணி பலம் பெற்றது.மேலும் அதிமுக இரண்டாகப் பிளவுபட்டு போனது.பிறகு பல தடைகளையும் அவமானங்களையும் எதிர்கொண்ட ஜெயலலிதா 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி சட்டமன்றத்தில் தலைவர் மு.கருணாநிதி பட்ஜெட்டை படிக்கத் தொடங்கிய போது வாக்குவாதம் ஏற்பட்டு அந்த கலவரத்தில் கருணாநிதியின் மூக்கு கண்ணாடி உடைந்ததாகவும்,மேலும் ஜெயலலிதாவின் சேலை இழுத்து கிழிக்கப்பட்டதாகவும் தலைவிரி கோலத்தோடு ஜெயலலிதா வெளியே வந்தது மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடிக்கப்பட்டது.
பிறகு அரசியலில் பல சோதனைகளையும் வழக்குகளையும் சந்தித்தார்.பிறகு ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவின் மீதான விசாரணையில் நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வரவே, மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா.அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
ஜெயலலிதா.அவரது விலையில்லா அரிசி, கிரைண்டர் மின்விசிறி மிக்சி என தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு அம்மா உணவகம் அம்மா குடிநீர் போன்ற வசதிகளை மக்களுக்காக கொண்டு வந்தது ஜெயலலிதாவின் செல்வாக்கை மக்களிடையே உயர்த்தியது.அரசியலிலும் மக்கள் மத்தியிலும் இரும்பு பெண்மணியாக வலம் வந்த 2016 செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான செய்திகள் வெளிவந்தன.சுமார் 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என கூறிய தகவல் தமிழகத்திற்கே கிடைத்த தோல்வி முகமாக இருந்தன.டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார்.
ஒரு நடிகை நாட்டை ஆண்டு அரசியல் களத்தில் வெற்றி கண்டு மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடத்தைப் பிடித்துள்ள இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்றும் அம்மாவாகவே மக்கள் மனதில் குடிகொண்டுள்ளார்.