இவ்வுலகில் உயிர்கள் வாழ நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் அத்தியாவசியமானது என நாம் அறிவோம். இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் 'பஞ்ச பூதங்கள்' அல்லது பஞ்ச பூத சக்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சக்திகளில் ஒன்று இல்லாவிடினும், உயிர்கள் வாழ்வது, குறிப்பாக மனித வாழ்வு சாத்தியம் இல்லை.
இந்த ஐந்து சக்திகளுக்கும் உலகை ஆக்கும் வல்லமையும், காக்கும் வல்லமையும், அழிக்கும் வல்லமையும் உண்டு. இந்த வல்லமையைக் கருத்தில் கொண்டு ஐம்பெரும்சக்திகள் என்றும் தமிழில் அழைப்பதைப் போல சமஸ்கிருதத்தில் பஞ்சபூதங்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த ஐம்பூதங்களின் அதிபனாக இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் தென் இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாக விளங்குகின்றன
இதில் அக்னியின் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர். அப்படி அங்குள்ள முக்கியமான சித்தர் தான் தொப்பி அம்மா.
தொப்பி அம்மா வருடத்தில் 365 நாளும் திருவண்ணாமலை சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருக்கிறார். யாரிடமும் பேசாமல் இருக்கும் தொப்பி அம்மா யார் எது கொடுத்தாலும் வாங்காதவர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். ஆனால் யாராவது ஒரு சிலர் கொடுக்கும் பொருட்களை மட்டும் வாங்கி கொள்வார்.
அப்படி யாராவது கொடுத்து அதை அவர் வாங்கிவிட்டால் என்றால் கொடுத்த நபர் நிச்சயம் அதிர்ஷ்டமானவர் என்றே கூறுகின்றனர் ஊர் மக்கள். இவர் யாருக்கும் ஆசீர்வாதம் தந்து விட மாட்டார். ஆனால் இவர் ஆசீர்வாதம் தந்துவிட்டால் நிச்சயம் ஆசி பெற்ற நபர் வளமுடம் வாழ்வார் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்ல தொப்பி அம்மா சாப்பிட்டு மிச்சம் வைத்ததை மக்கள் பிரசாதம் என்கின்றனர்.
இவரை உயிருடன் வாழும் பெண் சித்தர் என்றே மக்கள் அழைக்கின்றனர்.