சமீப காலமாக யூ.ட்யூபில் அதிகமாக காணப்படுவது டாக்டர் ஷர்மிகாவின் வீடியோக்கள் தான். சித்தா மருத்துவரான இவர் டாக்டர் டெய்சியின் மகளாவார். இவரின் இயற்கை வைத்தியமும், கனிவான பேச்சும் கொஞ்ச நாட்களிலேயே இவருக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்துள்ளது.
எப்போதும் அன்பாக பேசும் ஷர்மிகா, காதல் திருமணம் செய்தவர். தன்னுடைய காதல் திருமணம் குறித்தும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார் டாக்டர் ஷர்மிகா.
சிறுவயது நண்பர்கள் நாங்கள்
என்னுடையது காதல் திருமணம் தான். என் கணவர் தருணை எனக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தெரியும். எட்டாவது படிக்கும்போது தான் நல்ல நண்பர்கள் ஆனோம். அதன்பின் பத்தாவது முடித்து வேறு வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டோம். காலேஜ் படிக்கும்போது மீண்டும் நட்பு ஏற்பட்டது.
வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்
நண்பர்களாக தான் இருந்தோம். அதன்பின் என் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த சமயத்தில் தருண் எனக்கு புரொபோஸ் செய்தார். எனக்கு ஆண் நண்பர்கள் யாரும் இல்லை, இவரை தவிர. இத்தனை வருடம் பார்த்து பழகியவர் என்பதால் நான் சம்மதித்தேன்.
அம்மாவிடம் ஒரே அழுகை
நான் நேராக சென்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன். அம்மா உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என கூறி ஒரே அழுகை. சொன்ன உடனே அம்மா கொஞ்சம் அப்செட் ஆனார். ஆனால் திருமணம் ஆகும்போது, நாம் பார்த்திருந்தால் கூட இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைத்திருக்காது என சொன்னார்.
சீக்கிரமாக நடந்த திருமணம்
நட்பு தான் பல வருடங்களாக இருந்தது, காதல் ஒரு வருடம் தான். எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் பிப்ரவரியில் வந்து அம்மாவிடம் சொன்னேன், நவம்பரில் திருமணம் நடந்தது.
பணக்காரன் வேண்டாம்
எனக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது பணக்காரன், பதவி இருப்பவன் என பார்க்கவில்லை. அவங்க பார்த்தது நேர்மையாக இருப்பானா, என்னை நன்றாக பார்த்துக் கொள்வானா, உண்மையா இருப்பானா என்று தான். இது அனைத்தும் தருனிடம் இருந்தது. அதனால் தான் நான் அம்மாவிடம் சென்று சொன்னேன். அவனிடம் குறை சொல்ல எதுவுமில்லை, தருணை என் வீட்டில் அனைவருக்கும் பல வருடங்களாக தெரியும்.
பெண்கள், ஆண்களிடம் கவனிக்க வேண்டியவை
பொய் சொல்பவன், பித்தலாட்டம் செய்பவன், திருடுபவன், இந்த குணங்களோடு இருக்க கூடாது. போய் சொல்கிறான் என்றாலே அவன் தவறானவன் என்று தான் அர்த்தம். இது தான் என் அம்மா எனக்கு சொல்லி கொடுத்தது.
நேர்மையாக இருக்க வேண்டும். நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். நாட்டின் மீது பற்று இருந்தால் குடும்பத்தின் மீது பற்று இருக்கும்.
சினிமா பார்த்து அதில் வரும் காதல் இருக்க வேண்டும் என்பது இல்லை வாழ்க்கை, குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்பவனாக இருக்க வேண்டும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும்.
நம் முன் உட்காந்தே சிகரெட் பிடிப்பவனாக இருக்க கூடாது. கெட்ட வார்த்தை பேசக்கூடாது.
கண்மூடித்தனமான காதல் இருக்க கூடாது
என்றைக்கும் கண்மூடித்தனமான காதல் மட்டும் இருக்க கூடாது. அவங்கள் என்ன பண்ணாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என நமக்கு தெரியாத அளவுக்கு காதல் இருக்க கூடாது. அப்படி கண்மூடித்தனமான காதல் இருக்கும்போது, ஏதாவது தவறாக நடந்து விட்டால் அதிலிருந்து மீள முடியாது.
என்ன பிரச்னை என்றாலும் பெற்றோரிடம் சொல்லுங்கள்
திருமணத்திற்கு பின் என்ன பிரச்சனை வந்தாலும் பெற்றோரிடம் சொல்லுங்கள். நான் எந்த விஷயமாக இருந்தாலும் என் அத்தையிடம் சொல்லி விடுவேன்.
தவாறனவனை எப்படி கண்டுபிடிப்பது
இப்போது பல பெண்கள் காதலிப்பவன் தவறானவன் என தெரிந்தாலும், அதிலிருந்து வெளியே வராமல் அவனிடம் சிக்கி வாழ்க்கை இழந்துவிடுகிறார்கள். சிலர் தவறு செய்கிறான் என தெரியாமல் கூட இருப்பார். உங்கள் காதலனோ அல்லது கணவனோ தவறு செய்கிறார்கள் என்றால் சில விஷயங்களை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
உங்களிடம் அவர்களின் போனை தர மாட்டார்கள், போன் தராமல் இருக்கும்போதே ஏதோ உங்களுக்கு தெரியாமல் நடக்கிறது என நீங்கள் தெரிந்து கொள்ளாமல். அதேபோல் ரொம்ப நன்றாக பார்த்துப்பார்கள், அதாவது பெர்பாமன்ஸ் அதிகமாக இருக்கும். தவறு செய்வதை மறைப்பதற்கு அவர்கள் அப்படி ஒரு வழியை பின்பற்றுவார்கள். அதனால் வாழ்க்கை துணியை பார்த்து தேர்ந்தெடுங்கள்.
இவ்வாறு அவரின் காதல் திருமணம் குறித்தும், பெண்கள் எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றும் டாக்டர் ஷர்மிகா சில விஷயங்களை பகிர்ந்தார்.