பெண்ணுறுப்புல சுடுதண்ணிய ஊத்துவாங்க : Transgender Katrina Emotional Interview

thumb_upLike
commentComments
shareShare

இன்று நம் நாட்டில் மூன்றாம் பாலினத்தவருக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர்கள் திருநங்கை என்ற அழகான பெயரும் பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரியாக, மாடலாக திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் சமுதாயத்தில் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு படும் கஷ்டம் நம்மால் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. பல போராட்டங்கள், பல இன்னல்கள் நிறைந்தது தான் அவர்களது வாழ்க்கை.

அப்படி பல போராட்டங்களை கடந்து வந்துள்ள திருநங்கை கத்ரினா, அவர் கடந்த வந்த பாதை குறித்து, தான் அனுபவித்த வேதனைகளையும், போராட்டங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறும்போது, ஐந்தாவது படிக்கும்போதே நான் எனக்குள் இருந்த பெண்மையை உணர்ந்தேன். ஒன்பதாவது படிக்கும்போது தான் எனக்கு ஒருவர் மேல் காதல் வந்தது. அப்போது தான் எனக்குள் இருந்த பெண்மையை நான் அதிகமாக உணர்ந்தேன். அந்த சமயத்தில் என் அம்மா இறந்துவிட்டார்.

எதற்காக பெண் போல் நடந்து கொள்கிறாய் என என் தந்தை என்னை அதிகமாக அடிப்பார். நெயில்பாளிஸ் போடக்கூடாது, கோலம் போடாதே என பயங்கரமாக அடிப்பார். ஆனால் அம்மா இறந்ததுக்கு பின் சமையலில் இருந்து நான் தான் அனைத்தையும் கவனித்துக் கொண்டேன். அதனால் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

நான் பெண்ணாக மாற வேண்டும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். அதற்கு காசு தேவைப்படும். அந்த சமயத்தில் பாண்டிச்சேரியில் தான் நான் முதன் முதலில் திருநங்கைகளை பார்த்தேன். அவர்களுக்கென வேலைகள் இருக்கும் என நினைத்து, புடவை கட்டி அவர்களிடம் சென்று வேலை வேண்டும் என்றேன்.

அவர்கள் என்னைப் பார்த்து, என்ன வேலை யார் வேலை கொடுப்பார்கள், நாம் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்றார்கள். முதல் நாள் கடையில் காசு கேட்பதற்காக ஐந்து பேருடன் சென்றேன், இரண்டாவது நாள் இரண்டு பேருடன் சென்றேன், மூன்றாவது நாள் நான் மட்டும் சென்றேன். அப்போது தான் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது. ஒருவன் வந்து இடுப்பை கிள்ளி விட்டு சென்றான். எனக்கு தெரியாது இப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்று.

2008-ம் ஆண்டு தான் கலைஞர் ஐயா திருநங்கை என்னும் பெயரை கொடுத்தார். அதற்கு முன் வரை ஏதேதோ பெயர்களை கொண்டு அழைப்பார்கள். இப்போது தான் மக்கள் திருநங்கைகளை புரிந்து கொள்கிறார்கள் என கூறினார்.

அறுவை சிகிச்சை பற்றி அவர் கூறும்போது, எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. பெண்ணாக மாற வேண்டும் என நினைத்தேன். அறுவை சிகிச்சை செய்தபோது 48 நாட்கள் வீட்டில் தான் இருந்தேன். அந்த வலியை சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் பதினோரு நாள் நான் செத்துவிட்டேனா, உயிருடன் தான் இருக்கிறேனா என எனக்கு தெரியவில்லை. மயக்கநிலையில் தான் இருந்தேன்.

நம் நாட்டில் இதற்கு சரியான விதிமுறைகள் இல்லை. பதினெட்டு வயதிற்கு மேல் தான் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு முன் மனநில மருத்துவர் நம்மிடம் பேசுவர். இவர்கள் உண்மையிலேயே திருநங்கையா, இல்லை மன பிரம்மையா என்பதை தெரிந்து கொள்ள அவர்கள் பேசுவர். ஆனால் நம் நாட்டில் காசு கொடுத்தால் எதுவும் கேட்காமல் அறுவை சிகிச்சை செய்துவிடுவார்கள் இந்த நிலைமை தான் இங்கு உள்ளது.

அறுவை சிகிச்சை செய்த போது திருநங்கைகள் தான் என்னை பார்த்துக் கொண்டனர். ஒரு குடம் நிறைய இருக்கும் ப்ளாக் டீ தான் குடிக்க வேண்டும். சப்பாத்தி, பாவற்காய் தான் சாப்பிட வேண்டும். இதைவிட கொடுமையானது, பெண்ணுறுப்பில் சுடுதண்ணி ஊற்றுவர். நான் பெண்ணாக மாற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் அத்தனை வலியையும் தாங்கிக் கொண்டேன் என்று அவர் அனுபவித்த வலி குறித்து பகிர்ந்து கொண்டார்.

வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து அவர் கூறும்போது, நான் வீட்டிற்கு சென்றபோது என் படிப்பு சான்றிதழ்களை எல்லாம் என் அப்பா சேதப்படுத்தி வைத்திருந்தார். வீட்டில் இருக்கும் பேமிலி போட்டோவில் என் முகத்தை அழித்து வைத்திருந்தார்.

குடிசை வீடாக இருந்ததை நான் தான் இன்று கட்டிக் கொடுத்துள்ளேன். என் அப்பாவை நான் தான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு என் அப்பா, தம்பி, அக்கா இவர்கள் என்னுடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் இவர்கள் யாரும் என்னுடன் சரியான உறவில் இல்லை என ஏக்கத்துடன் கூறுகிறார்.  

திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வது குறித்து கத்ரினா கூறும்போது, இன்று பலர் பல தெருவோரங்களில் நிற்கின்றனர். அவர்களின் வலி அவர்களுக்கு தான் தெரியும். சிலர் அவர்களை பார்த்து பரிதாப்படுவர், சிலர் திட்டிவிட்டு செல்வர், சில குடிமகன்கள் பீர் பாட்டில் கொண்டு அடித்துவிட்டு செல்வர். எனக்கு கூட அந்த அனுபவம் உண்டு, அடிவாங்கி அதன்பின் தையல் போட்டு கொடுமையானது அது. என்னை சில பேர் கடத்தி கொண்டு கொடுமை செய்த நிகழ்வுகளும் உண்டு. 15 ஆண்கள் என்னை கடத்தி கொடுமை செய்தார்கள், ஆனால் அப்போது கூட என்னை காப்பாற்றியதும் ஆண்களே என சில கொடுமையான நிகழ்வுகளையும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

நம் நாடு வல்லரசாகும் நிலைமையில் உள்ளது, ஆனால் இது மட்டும் இன்னும் மாறவில்லை. என்று இந்த உலகம் அனைத்து மக்களையும் சமமாக நடத்த போகிறது என்ற ஒரு ஆழமான அழுத்தமான கேள்வியை நம் முன் வைக்கிறார் கத்ரினா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close