வயிறு நெறஞ்சா போதும் கல்லாப்பெட்டி நிறைய தேவையில்ல : Jayapratha About Rs 99 Food Tiffinbox

thumb_upLike
commentComments
shareShare

நாம் உயிர் வாழ முக்கியமான ஓன்று ஆரோக்கியமான உணவு. ஆனால் இன்று பலர் வேலைக்கு செல்வதால் சமைக்க நேரமில்லாமல், ஹோட்டல்களில் ஆர்டர் செய்து தங்களது பசியை போக்கிக் கொள்கின்றனர். எப்போதாவது வெளியில் சென்று உணவு சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் எப்பொழுதுமே வெளி உணவுகளை உட்கொள்ளும்போது நம் உடலில் பல பிரச்சினைகள், கோளாறுகள் ஏற்படும். சில நேரங்களில் அது புட் பாய்சனாக கூட மாறும்.

அப்படி பலர் இன்று ஆரோக்கியமான வீட்டு உணவு கிடைக்காத என்று ஏங்குகின்றனர். குறிப்பாக ஐ.டி-யில் பணிபுரியும் இளைஞர்கள், வேறு ஊர்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து தங்கி படிக்கும் மாணவர்கள், தனியாக வாழும் முதியவர்கள் என பலரும் நல்ல உணவுக்காக ஏங்குகின்றனர்.

அப்படி அவர்களின் ஏக்கத்தை போக்கும் அன்னலட்சுமியாக திகழ்கிறார் குன்றத்தூரை சேர்ந்த ஜெயப்ரதா. இவர் தினமும் மூன்று வேலையும் 99 ரூபாய்க்கு டிப்பன் பாக்ஸ் உணவு வழங்குகிறார்.

இந்த டிப்பன் பாக்ஸ் ஐடியா பற்றியும், தினமும் பலருக்கு உணவு சமைத்து வழங்குவது பற்றியும் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு எப்படி இப்படி ஒரு யோசனை கிடைத்தது, அவருக்கு இதில் உறுதுணையாக இருப்பவர்கள் என அனைத்தையும் நாம் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

42 வயதாகும் ஜெயப்ரதா பி.காம் பட்டதாரி. இவருக்கு சிறு வயதில் இருந்தே சமையல் மீது ஆர்வம். ஆறாவது படிக்கும் போது சமையல் கற்றுக் கொண்டார்.

எப்போதுமே ஜெயப்ரதாவுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை. அதனால் தனக்கு தெரிந்த இந்த சமையல் கலையை வைத்து சம்பாதிக்கலாம் என 2015-ல் ஒரு கேட்டரிங் பிசினஸ் ஆரம்பித்துள்ளார். ஆனால் அதை சில காரணங்களால் தொடர முடியாமல் போனது. ஆனால் ஏதாவது செய்ய வேண்டும், சம்பாதிக்க வேண்டும். நம்மை அவமானப்படுத்தியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஆழமாக இருந்தது. அதனால் மீண்டும் இதை தொடங்கினார்.

ஒவ்வொரு நாளும் விதவிதமான ஆரோக்கியமான உணவுகள் செய்து கல்லூரி மாணவர்கள், ஐ.டி-யில் பணிபுரிபவர்கள், முதியவர்கள் என ஆர்டர் எடுத்து செய்து கொடுத்தார். உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு 99 ரூபாய்க்கு சுவையான உணவுகளை வழங்க ஆரம்பித்தார்.

இதுபற்றி ஜெயப்ரதா கூறும்போது, தினமும் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை தொடங்கிவிடுவேன். எனக்கு டி.வி. சீரியல்கள் பார்ப்பது பிடிக்காத ஒன்று. அதை பார்ப்பதால் மன அழுத்தம் தன் அதிகமாகும். எனக்கு இந்த சமையல் ஆர்டர் இருப்பதால் இதுலேயே என் நாள் ஓடிவிடும். நான் சமையல் ஆர்டர்களையும் பார்த்துக்கொண்டு, என் வீட்டு வேலைகளையும் கவனித்து வருகிறேன்.

ஆம், சில நேரங்களில் என்னால் இதை செய்ய இயலாது, உடல்வலி அதிகமாக இருக்கும். ஆனால் நம் உணவுக்காக ஒருத்தர் காத்திருப்பார் என்னும் எண்ணமும், நான் இதுக்கு முன் பட்ட அவமானங்கள் மனதில் ஒரு நிமிடம் வந்து போகும். அந்த வலி முன், உடல் வலி எனக்கு பெரிதல்ல. என் மகன் எனக்கு உறுதுணையாக இருக்கிறான். நான் போரூரில் இருந்து பல்லாவரம் வரைக்கும் தான் சப்ளை செய்கிறேன். ஆனால் சில நேரங்களில் வெகு தொலைவில் இருந்து ஆர்டர் வரும். அப்போது என் மகன் தான் எனக்கு அதை டெலிவர் செய்ய உதவி செய்வான்.

என் மகன் இல்லையென்றால் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார் ஜெயப்ரதா.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் ஏதாவது ஓன்று கற்றுக்கொள்ள வேண்டும். இன்று நம்மிடம் பணம் இருந்தால் தான் அனைவரும் மதிக்கிறார்கள். நம்மிடம் எதுவுமில்லை நாம் வறுமையில் இருக்கிறோம் என்று தெரிந்தால் நம்மிடம் பேசக் கூட தயங்குவார்கள். என்னைப் பற்றி பல பேர் கேவலமாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் அதை நான் கண்டுகொள்வதில்லை. அதை பற்றி யோசிப்பதும் இல்லை.

மன தைரியத்துடன் பெண்கள் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு உத்வேகம் அளிக்கிறார் ஜெயப்ரதா.

இவரின் சேவை இன்று போல் என்றும் தொடரட்டும்.  

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close