என்ன மாதிரி யாரும் ஏமாறாதிங்க - கண்ணீரில் கதறிய Auto ஓட்டுனர் சிந்து: Sindhu Interview About LoanApp

thumb_upLike
commentComments
shareShare

ஆன்லைன் சந்தையில் உடனடி தனிநபர் கடன்கள் வழங்கும் கடன் செயலிகள் ஏராளமாக கிடைக்கின்றன. இந்த செயலி மூலம் கடன்வாங்கும் தனிநபர்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படுவதோடு, தனிநபர் தகவல்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது.

இதில் கடன் வாங்கும் நபர்களை அதிக பணம் கேட்டு ஒரே வாரத்தில் மிரட்டுவதும், அவர்களின் குடும்ப நபர்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பவும் செய்கின்றனர். இதனால் பல இடங்களில் பலர் பாதிக்கபடுகின்றனர்.

அப்படி இந்த கடன் செயலி மூலம் பாதிக்கப்பட்ட திருநங்கை சிந்து எப்படி இந்த செயலியில் சிக்கினார் என்பதை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஆட்டோ ஓட்டுனர் சிந்து

நான் மூன்று வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறேன், அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன், சசிகுமார் படம் ஒன்று, கௌதம் மேனன் படம் ஒன்று என மூன்று படங்களில் நடித்துள்ளேன்.

பார்லர் வைக்க வேண்டும் என்பது என் ஆசை

ப்யூட்டிசன் படித்து சொந்தமாக பார்லர் வைக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அதற்கு அதிக செலவாகும், அதில் லாபம் பார்க்கவும் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். அதை தாண்டி எனக்கு தெரிந்தது ட்ரைவிங். அதனால் நான் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். டியூவில் தான் ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கிறது. ஆட்டோவில் கிடைக்கும் வருமானம் என் வீட்டு செலவுக்கு சரியாக இருக்கும்.

குடும்பத்துடன் இருக்க கஷ்டப்பட்டேன்

நான் ஒரு திருநங்கை, அதனால் என் அம்மா என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு அவர்களுடன் அடிக்கடி பேசி, இறுதியில் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். குடும்பத்துடன் சேரவே நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன்.

கடன் செயலி

ஆட்டோ சரியாக ஓடவில்லை, அதனால் டியூ கட்ட லேட்டாகி விட்டது. அப்போது ஒரு ஆப் பார்த்தேன். அது ஒரு லோன் ஆப். அதில் 7000 ரூபாய் கடன் வாங்கினேன். எல்லா விவரங்களும் கேட்டனர், நானும் அனுப்பினேன். எனக்கு மறுநாளே பணம் வந்துவிட்டது.

என்னை மிரட்டினார்கள்

ஒரு மாதம் கால அவகாசம் இருந்தது, ஆனால் ஏழாவது நாளே என்னை போன் செய்து பணம் கட்ட சொல்லி மிரட்டினார்கள். ஒரு மாதம் கால அவகாசம் உள்ளதே என கேட்டதற்கு என்னை மிரட்டினார்கள், அதாவது வாங்கியது 7000, அவர்கள் என்னை கட்ட சொல்லியது 30,000. நீ கட்டாவிட்டால் உன் காண்டாக்ட்டில் இருக்கும் அனைவருக்கும், நீ கடன் வாங்கியதை சொல்லி விடுவோம் என்றனர். நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

என்னை ஆபாசமாக சித்தரித்து...

அதுதான் பெரிய பிரச்சனை ஆகி விட்டது. என் காண்டாக்ட்டில் இருக்கும் அனைவருக்கும் நான் கடன் வாங்கியதாக சொல்லாமல், பாலியல் தொழிலாளி என அனுப்பிவிட்டனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் எனக்கு போன் செய்து விசாரித்தனர். விஷயத்தை சொல்லவும், அப்படியா என போனை வைத்துவிட்டனர்.

என்னை காப்பாற்றிய குடும்பம்

என் மீது பரிதாபப்பட்டது என் குடும்பம் மட்டும் தான். என் சகோதரிகள் எனக்கு பணம் கொடுத்து உதவினர். அதற்குள் அவர்கள் எனக்கு தனியாக போட்டோக்கள் அனுப்பினர். அதில் என் படத்தை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் செய்து அனுப்பினர். பணத்தை கட்டாவிட்டால் இது அனைவருக்கும் சென்று விடும் என்றனர். அதிலிருந்து உடனே வெளிவர வேண்டும் என நினைத்து என் சகோதரிகள் கொடுத்த பணத்தை வைத்து கட்டிவிட்டேன்.

போலீஸ் கம்ப்ளைன்ட்

அந்த சமயத்தில் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தால் போதும் என்றே நினைத்தேன். அதன்பின் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். அவர்கள் இதன் பின் ஏதாவது போன் செய்தால், கம்பளைன்ட் கொடுங்கள் என்றனர். ஆனால் அதன்பின் எனக்கு எந்த போனும் வரவில்லை.

தயவுசெய்து யாரும் எந்த ஆப்பிலும் கடன் வாங்கி விடாதீர்கள். ஏழைகள் தான் அவர்களின் டார்கெட்டே. என்னை இப்போது பலரும் அசிங்கமாக பார்க்கின்றனர். என் சொந்தமே என்னை வெறுக்கிறது. ஆனால் நான் தவறான பெண் இல்லை என கூறினார் சிந்து.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close