ஐயப்பன் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்.

thumb_upLike
commentComments
shareShare

கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது.

கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்

null

1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.

2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.

3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.

4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.

5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.

null

6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.

7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.

9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.

11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.

12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.

13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.

14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.

15. காலணிகள் பயன்படுத்தக்கூடாது.

null

16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.

17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.

18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.

19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.

20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.

22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை  தரிசிக்க செல்லும் போது 18படிகளை தாண்டி செல்கிறார்கள்.

 

null

அந்த 18பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன

 

முதல் படி – விஷாத யோகம்

பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி

 

இரண்டாம் படி – சாக்கிய யோகம்

பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.

 

மூன்றாம் படி – கர்ம யோகம்

கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்,

 

நான்காம் படி – ஞானகர்ம சன்னியாச யோகம்

பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.

 

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்

நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

 

ஆறாம் படி – தியான யோகம்

கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது இதுவே ஆறாவது படி.

 

ஏழாம் படி – பிரம்ம ஞானம்

இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

 

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்

எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

 

ஒன்பதாம் படி – ஆன்மிக யோகம்

கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

 

பத்தாம் படி – விபூதி யோகம்

அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி

 

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்

பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

 

பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்

இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு ஏழை–பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

 

பதிமூன்றாம் படி – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே  அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி

.

பதினான்காம் படி – குணத்ர விபாக யோகம்

யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம்படி

 

பதினைந்தாம் படி – தெய்வாசுர விபாக யோகம்

தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

 

பதினாறாம் படி – சம்பத் விபாக யோகம்

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

 

பதினேழாம் படி – சிரித்தாத்ரய விபாக யோகம்

’சர்வம் பிரம்மம்’ என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

 

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்

யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல்,  உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில்  அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி .

 

சத்தியம் நிறைந்த இந்த பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி  தத்துவம். 

 

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !!!

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close